ஆசிரியர்: ரிச்சர்ட் எம். ஸ்டால்மேன்
(ஏப்ரல் 24, 1992 ன் பதிப்பு) அறிமுகம்
மென்பொருள் என்றொன்று இருப்பது அதன் பயன்பாடு குறித்த முடிவுகள் எவ்வாறு மேற்கொள்ளப் பட வேண்டும் என்பது குறித்த தவிர்க்க இயலாத கேள்வியினை எழுப்புகிறது. உதாரணத்திற்கு நிரலொன்றின் நகலினையுடைய நபரொருவர் அதன் நகலொன்றைப் பெற விழையும் மற்றொருவரை சந்திக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர்களால் அந்நிரலை நகல் எடுக்க இயலும். இங்ஙனம் நடைப் பெறுவதை யார் தீர்மானிப்பது? சம்பந்தப் பட்ட நபர்களா? அல்லது“உரிமையாளரென்று” அழைக்கப்படும் இன்னொருவரா?
உருவாக்குவோரது இலாபத்தினை இதன் விடைக்கான காரணியாக அனுமானித்துக் கொண்டு, இவ்வினாக்களை மென்பொருட்களை உருவாக்குவோர் கருதுகிறார்கள். வர்த்தகத்துக்குள்ள அரசியல் பலமானது இவ்விரு காரணிகளையும், அதற்கான விடையாக உருவாக்குவோர் சொல்வதையும் ஏற்கும்படி அரசாங்கத்தை இட்டுச் சென்றுள்ளது. அதாவது நிரலொன்றுக்கு உரிமையாளர் இருக்கிறாரென்று. நிதர்சனத்தில் அது நிரலின் உருவாக்கத்தில் தொடர்புடைய நிறுவனமே.
இதே கேள்வியினை வேறொரு காரணியைக் கொண்டு நான் கருத விரும்புகிறேன்: பொது மக்களின் செழிப்பும் விடுதலையும்.
தற்போதைய சட்டங்களுக்கு உட்பட்டு இதன் விடையைத் தீர்மானிக்க இயலாது. அறத்தைச் சார்ந்தே சட்டமிருக்க வேண்டும், அதர்மத்தைச் சார்ந்து அல்ல. இவ்வினாவினை தற்போதைய நடைமுறையும் தீர்மானிக்காது. வேண்டுமாயின் சாத்தியமான விடைகளை அது பரிந்துரைக்கலாம். உதவி யாருக்குச் செய்யப்படுகிறது? மென்பொருட்களுக்கு உரிமையாளர்களை அங்கீகரிப்பதால் யார், எவ்வளவு புண்படுத்தப் படுகிறார்கள்? என்பவையே இதைச் சீர்தூக்க ஒரே வழி. வேறுவிதமாகச் சொல்ல வேண்டுமாயின், தனியொருவரின் விடுதலையையும் பொருட்களின் உற்பத்தியையும் கருத்தில் நிறுத்தி, நிதி ஆதாயம் தரக் கூடிய ஆராய்ச்சியொன்றை நாம் மேற்கொள்ள வேண்டும்.
இக்கட்டுரையில் உரிமையாளர்களைக் கொண்டிருப்பதால் ஏற்படும் விளைவுகளை விவரித்து முடிவுகள் பாதகமாக அமையும் என்பத எடுத்துரைக்கின்றேன். நாம் இயற்றும் மென்பொருட்களை பகிர, ம்றுவிநியோகம் செய்ய, கற்க மற்றும் மேம்படுத்த பிறரை ஊக்குவிப்பது நிரலாளர்களின் கடமை என்பதே எமது முடிவு.வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால்“கட்டற்ற” மென்பொருட்களை இயற்றுவது.(1)
தங்கள் பலத்தை உரிமையாளர்கள் எவ்வாறு நியாயப் படுத்துகிறார்கள்
நிரல்களைச் சொத்து எனச் சொல்லும் இன்றைய முறையினால் பயனடைவோர் நிரல்களின் மீதான தங்களின் உரிமைக் கோரலுக்கு ஆதரவாக இரண்டு வாதங்களை முன்வைக்கிறார்கள். உணர்வுப் பூர்வமான வாதமொன்று; போருளாதாரம் சார்ந்த வாதம் மற்றொன்று.
“என்னுடைய உடல் பொருள் , ஆவியனைத்தையும் இந்நிரலில் செலுத்தியுள்ளேன். இது என்னிடமிருந்து வருகிறது. இது என்னுடையது!” என்பதாக இருக்கிறது உணர்வுபூர்வமான வாதம்.
இவ்வாதத்தினை சிறப்பாக மறுத்துரைக்க வேண்டிய அவசியமில்லை. இத்தகைய பந்த உணர்வானது நிரலாளர்கள் தங்களுக்குப் பொருந்துகிற போது ஏற்படுத்திக் கொள்ளக்கூடியது. தவிர்க்க இயலாதது ஒன்றுமல்ல. அதே வேளையில் இதே நிரலாளர்கள் ஒரு சம்பளத்தின் பொருட்டு எவ்வாறு தங்களின் எல்லா உரிமைகளையும் ஒரு பெரிய நிறுவனத்திடம் அடமானம் வைக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ளவும். உணர்வுபூர்வமான அனைத்து பந்தங்களும் சட்டென்று மறைந்துவிடும். மாறாக மத்திய காலங்களில் தங்களின் பணிகளில் தங்களின் கையொப்பத்தைக் கூட இடாத தலைசிறந்தக் கலைஞர்களையும் கருத்தில் கொள்ளவும். அவர்களுக்கு கலைஞரின் பெயர் முக்கியமல்ல. பணியின் நிறைவும் அதன் நோக்கத்தின் பூர்த்தியுமே கருதப் பட்டது. இவ்வணுகுமுறையானது பல நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்தது.
பொருளாதார அணுகுமுறையின் போக்கை பாருங்கள்; “ நான் பணம் சம்பாதிக்க விரும்புகிறேன். (பொதுவாக ‘வாழ்க்கையை நடத்த’ என அரைகுறையாக இது விவரிக்கப் படுகிறது.) தாங்கள் நிரலெழுதுவதன் மூலம்என்னைப் பணக்காரனாக அனுமதிக்கவில்லை என்றால் நான் நிரலெழுத மாட்டேன். என்னைப் போன்றே மற்றவரும் இருப்பதால் யாருமே நிரலெழுத மாட்டார்கள். கடைசியில் தங்கள் கையில் நிரலெதுவுமே சிக்காது! ” புத்திச்சாலிகளிடமிருந்து பகறப்படும் நட்பான அறிவுரையாக இவ்வச்சுறுத்தல் அரங்கேற்றப்படுகிறது.
இவ்வச்சுறுத்தல் ஏன் பித்தலாட்டமானது என்பதை பின்னர் விளக்குகின்றேன். மற்றொரு வாதத்தில் உட்பொதிந்துள்ள தெளிவான அனுமானத்தினை முதலில் எடுத்துரைக்க விரும்புகின்றேன்.
நிரலொன்றும் இல்லாத நிலையினையும் தனியுரிம நிரலொன்றின் சமூகப் பயன்பாட்டையும் ஒப்பிட்டவாறே இதனாக்கம் துவங்குகிறது. இறுதியாக ஒட்டுமொத்தமாய் பார்க்கிறபோது பயனளிப்பதாய் இருப்பதால் தனியுரிம மென்பொருளின் உருவாக்கம் ஊக்குவிக்கப்பட வேண்டியதாக முடிவு கொள்கிறது. மாயையாதெனின் தனியுரிம மென்பொருளிருப்பதால் ஏற்படும் முடிவும் மென்பொருளே இல்லாத நிலையால் ஏற்படும் விளைவுமே இவ்விடத்தில் ஒப்பிடப் படுகின்றன. வேறு மாற்றுக்களே இல்லாதது போல அனுமானிக்கப் படுகிறது.
மென்பொருளுக்கு பதிப்புரிமையளிக்கும் முறையால், மென்பொருள் உருவாக்கம் என்பதே அம்மென்பொருளின் பயன்பாட்டினை நிர்வகிக்கக் கூடிய ஒரு உரிமையாளரின் இருப்போடு தொடர்புப் படுத்தப் படுகின்றது. இத்தொடர்பு இருக்கின்ற வரையில் , நமக்குத் தனியுரிம மென்பொருள் அல்லது மென்பொருளில்லா நிலையைத் தவிர வேறு தேர்வு இல்லை. இத்தொடர்பொன்றும் தவிர்க்கயியலாதது அல்ல. குறிப்பிட்ட சமூக/ சட்டக் கொள்கையால் ஏற்படும் விளைவினையே நாம் கேள்விக் குட்படுத்துகின்றோம். அதாவது உரிமையாளர்களை ஏற்கும் முடிவு. தனியுரிம மென்பொருளுக்கும் மென்பொருளற்ற நிலைக்குமிடையே தேர்வினை உருவாக்கக் கோரும் கேள்வியே பரிகசிக்கத் தக்கது.
உரிமையாளர்களைக் கொண்டிருப்பதற்கு எதிரான வாதம்
“மென்பொருள் உருவாக்கத்தை உரிமையாளர்களைக் கொண்டிருப்பதோடு தொடர்பு படுத்தி அதன் பயன்பாட்டினைக் கட்டுப்படுத்த வேண்டுமா?” என்பதே நம்முன்னுள்ள கேள்வி.
இதை முடிவு செய்வதற்கு இவ்விரண்டால் சமூகத்தில் ஏற்படத்தக்க தாக்கத்தினை தனித் தனியாக நாம் கருத வேண்டும். மென்பொருளை உருவாக்குவதால் (அதை விநியோகிப்பதற்கான உரிமத்தினைச் சாராது) ஏற்படும் தாக்கத்தினையும் அதன் பயன்பாட்டினைக் கட்டுப் படுத்துவதால் ஏற்படும் தாக்கத்தினையும் (மென்பொருள் உருவாக்கப் பட்டுவிட்டது என்பதைக் அனுமானித்துக் கொண்டும்) நாம் கருத வேண்டும். இவற்றுள் ஒன்று நன்மை பயப்பதாகவும் மற்றொன்று தீமை பயப்பதாகவும் இருக்குமாயின் , இவற்றுக்கிடையே ஏற்படுத்தப் படும் தொடர்பினை விட்டுவிட்டு, நன்மைப் பயப்பதை மேற்கொள்வது நல்லது.
வேறு வகையில் சொல்லவேண்டுமாயின், ஏற்கனவே உருவக்கப் பட்ட நிரலொன்றின் விநியோகத்தினைக் கட்டுப் படுத்துவது ஒட்டுமொத்த சமூகத்திற்கு தீமையாயின், அறநெறி வாழ் மென்பொருள் உருவாக்குபவர் அங்ஙனம் செய்யமாட்டார்.
பகிர்ந்துக் கொள்வதை கட்டுபடுத்துவதால் ஏற்படும் தாக்கத்தை அறிய, நாம் கட்டு படுத்தப் பட்ட (தனியுரிம) நிரலொன்றால் சமூகத்திற்கு ஏற்படும் பயனையும் அதே மென்பொருள் அனைவருக்கும் கிடைப்பதால் ஏற்படும் பயனையும் ஒப்பிட வேண்டும். அதாவது சாத்தியமுள்ள இரு கூறுகளை ஒப்பிடுவது.
இவ்வாய்வானது இதனை மறுத்துரைப்பதாய் அமையும் வாதமான, “நிரலின் நகலொன்றைப் பிறருடன் பகிர்ந்துக் கொள்வதால் ஏற்படும் நன்மையை அங்ஙனம் செய்வதால் உரிமையாளருக்கு ஏற்படும் தீமை இல்லாது செய்துவிடுகிறது ” என்பதையும் ஆராய்கிறது. இப் பிரதிவாதமானது நன்மையும் தீமையும் சம அளவில் இருப்பதாகக் கருதுகிறது. இவ்வாய்வானது இப்பரிமாணங்களை ஒப்பிட்டு இதனால் ஏற்படும் நன்மை மிக அதிகம் எனவும் எடுத்துக் காட்டுகிறது.
இவ்வாதத்தை தெளிவாக விளக்க, சாலை நிர்மாணத்திற்கு இதனை பொருத்திப் பார்ப்போம்.
அனைத்து சாலைகளையுமே வசூல் சாவடிகளுடன் நிர்மாணிக்க நிதியளிப்பது சாத்தியமாக இருக்கலாம். அனைத்துச் சாலை முனைகளிலும் வசூல் சாவடிகளை அமைக்க வழி கோலும். இத்தகைய முறையானது சாலைகளை மேம்படுத்த அதிக தொகையும் திரட்டித் தரும். அதே சமயம் பயனர்களைத் தாங்கள் பயன்படுத்தும் சாலைகளுக்காக கட்டணம் செலுத்தும் படியும் செய்யும். ஆனால், வசூல் சாவடியானது சுமூகமானதொரு பயனத்துக்கு ஏற்படுத்தப் படும் செயற்கையான தடங்களாகும். மகிழுந்துகளும், சாலைகளும் எத்தன்மையதோ அதன் விளைவால் இது ஏற்படாதமையால் இது செயற்கையானது.
வசூல் சாவடிகளைக் கொண்ட சாலைகளையும், தடையற்ற சாலைகளையும் அதன் பய்ன்பாடுகளைக் கொண்டு ஒப்பிடுகையில், வசூல் சாவடிகள் இல்லாத சாலைகள் நிர்மாணிக்க, இயக்க செலவுக் குறைந்ததாகவும், பாதுகாப்பானதாகவும், திறம்பட பயன்படுத்த வல்லதாகவும் இருக்கின்றன. (2) ஏழை நாடொன்றில், வசூல் சாவடிகள் சாலைகளை பல குடிமக்களுக்கு இல்லாது செய்துவிடும். ஆகையால் வசூல் சாவடிகள் இல்லாத சாலைகள் குறைந்த செலவில் சமூகத்திற்கு அதிக பயனைத் தரவல்லது. சமூகத்திற்கு உகந்ததும் கூட. ஆகையால் சமூகம் சாலைகளுக்கான நிதியை வசூல் சாவடிகளின் மூலம் திரட்டாமல் வேறு வழிகளில் கொணர வேண்டும். ஒரு முறை நிர்மாணிக்கப் பட்டுவிட்டால் சாலைகளின் பயன்பாடு தடையற்றதாக இருக்க வேண்டும்.
இச்சாவடிகளை ஆதரிப்போர் நிதித் திரட்ட மாத்திரம் இதனை வழியாகச் சொல்லுகிற போது, வேறு சாத்தியக் கூறுகளைப் புறக்கணிக்கிறார்கள். வசூல் சாவடிகள் நிதி திரட்ட வல்லது தான். அவை வேறு சிலவற்றையும் கூடவே செய்கின்றன. விளைவு சாலையை தரமிழக்கச் செய்கின்றன. தடையற்ற சாலைகளைப் போல வசூல் சாவடிகளைக் கொண்ட சாலைகள் நன்மைப் பயப்பதாய் இருப்பதில்லை. தொழில்நுட்ப ரீதியாக மேன்மை யுடைய சாலைகளைத் தருவதென்பதை , தடையற்ற சாலைகளை வசூல் சாவடிகளைக் கொண்ட சாலைகளாக மாற்றுவது என அர்த்தம் கொண்டால், அது முன்னேற்றமாகாது.
தடையற்ற சாலைகளை உருவாக்குவதற்கும் நிதித் தேவைதான். அதைப் பொது மக்கள் ஏதாவதொரு வழியில் செலுத்தித் தான் ஆக வேண்டும். ஆனால் இது வசூல் சாவடிகளை இன்றியமையாதவையாக கருதுவதாகாது. இவ்விரு சந்தர்ப்பங்களிலுமே நிதியளிக்க வேண்டியவர்களாக உள்ள நாம் தடையற்ற சாலைகளுக்கு நிதியளிப்பதால் நாம் செலவிடும் பணத்திற்கு அதிக மதிப்பினைப் பெறுகின்றோம்.
சாலையில்லா நிலையைக் காட்டிலும் வசூல் சாவடிகள் நிறைந்த சாலை தாழ்ந்தது என நான் இங்கே சொல்லவில்லை. வசூலிக்கப் படும் தொகை மிக அதிகமாக இருந்து யாருமே பயன்படுத்தாதுப் போனால் அது உண்மையாகலாம். வசூலிப்பவரிடன் இத்தகைய கொள்கை எதிர்பார்க்கக் கூடியது அல்ல. ஆயினும் வசூல் சாவடிகள் குறிப்பிடத் தக்க சேதாரமும் அசவுகரியமும் அளிக்கின்ற வரையில், அதிக தடைகளையேற்படுத்தாது நிதி திரட்டுவது நல்லது.
இவ்வாதத்தினை மென்பொருள் உருவாக்கத்திற்கு பொருத்தி, பயனுள்ள மென்பொருள் நிரல்கட்கு, “ வசூல சாவடிகளை ” ஏற்படுத்துவதென்பது சமூகத்திற்கு எத்தகைய பாதகத்தை ஏற்படுத்தும் என்பதை விளக்குகின்றேன். இது நிரல்கள் உருவாக்கத்தை அதிக விலையுள்ளதாக்கி, அதிக விலையுடனே விநியோகம் செய்யத் தக்கதாக்கி, குறைந்த திருப்தியையும் திறம்பட பயன்படுத்தற்றதாகவும் செய்துவிடும். அதைத் தொடர்ந்து நிரல் உருவாக்கம் வேறு வழிகளில் ஊக்குவிக்கப் பட வேண்டும் என்பது தொடரும். இதைத் தொடர்ந்து மென்பொருளுருவாக்கத்தினை ஊக்குவிக்கவல்ல ஏனைய வழிகளையும், (உண்மையிலேயே தேவையான அளவிற்கு) நிதி திரட்டும் முறையினையும் விளக்குகின்றேன்.
மென்பொருளைக் கட்டுப் படுத்துவதால் ஏற்படும் தீமைகள்
ஒரு நிரல் உருவாக்கப் பட்டதெனவும் அதற்குண்டான நிதியும் அளிக்கப் பட்டுவிட்டதாகவும் நினைத்துக் கொள்ளுங்கள். அதனை தனியுரிமமாக்கவேண்டுமா அல்லது கட்டறுத்து பகிர்ந்து கொள்ள வழி செய்ய வேண்டுமா என்பதை சமூகம் தேர்வு செய்ய வேண்டும்.நிரலொன்றின் இருப்பும் அதன் புழக்கமும் விரும்பத்தக்ககாக கருதவும்.(3)
விநியோகத்தினையும் மாற்றங்களையும் கட்டுப் படுத்துவதால் அதன் பயன்பாட்டினை எளிமையாக்க முடியாது. அவற்றால் இடைஞ்சல்களை வேண்டுமாயின் ஏற்படுத்த முடியும். விளைவு எதிர்மறையாகவே இருக்கும். எத்தகையது? எத்தன்மையது?
மூன்று விதமான பொருளாதாரத் தீமைகள் இத்தகைய கட்டுபாட்டால் ஏற்படலாம்.
சொற்பமானோரே நிரலை பயன்படுத்துவர்.
நிரலை தமதாக்கவோ அதன் வழு நிக்கவோ பயனர்களால் இயலாது.
நிரலைக் கொண்டு பிற உருவாக்குநர்களால் கற்கவோ அல்லது தமது புதிய பணிகளை அதனை அடிப்படையாகக் கொண்டுத் துவங்கவோ இயலாது.
ஒவ்வொரு வகை பொருளாதாரத் தீமையும் தன்னகத்தே மீளவரும் உளவியல் ரீதியான பாதிப்புகளையும் கொண்டுள்ளன. மக்கள் மேற்கொள்ளும் முடிவுகள், அதனைத் தொடர்ந்து அவர்களிடையே ஏற்படக்கூடிய உணர்வுகள், அணுகுமுறைகள் மற்றும் சார்புடைமைகளின் தாக்கங்களை இது குறிக்கின்றது. மக்கள் சிந்திக்கும் முறையில் ஏற்படும் இத்தகைய தாக்கம் சக குடிமக்களுடனான அவர்களுடைய உறவுகளைப் பாதிப்பதோடு பொருளாதார விளைவுகளையும் ஏற்படுத்த வல்லதாகின்றது.
நிரலொன்றால் ஏற்படத் தக்க நன்மதிப்பை இம்மூன்று வகையான பொருளாதார பாதிப்புகள் குன்றச் செய்கின்றன. ஆனால இன் நன்மதிப்பை இல்லாது செய்து விட இயலாது. நிரலின் நன்மதிப்புகள் எல்லாவற்றையும் அவை இல்லாது செய்து விடுமாயின், நிரலெழுதவற்கு தேவைப் பட்ட அத்துனை ஆற்றலுக்கு நிகரான தீமைகளை நிரலெழுதுவது சமூகத்திற்குத் தருவதாகிறது. வாதத்தின் பொருட்டு விற்பனைக்குகந்த இலாபம் தரவல்ல நிரலொன்று சிறிதளவேனும் நிகரான நேரடி பொருளாதார நன்மைகளை கொடுக்கவேண்டும்.
ஆனால் மீளவரும் உளவியல் ரீதியான தீமைகளைக் கருத்தில் கொள்வோமாயின் , தனியுரிம மென்பொருள் விளைவிக்க வல்ல தீமைக்கு எல்லையே இல்லை.
மென்பொருள் ஏன் கட்டற்று இருக்க வேண்டும்-2